ஞாயிறு, 22 டிசம்பர், 2013

கணித வரையறைகள்:-

கணித வரையறைகள்:-
எண்கள்:-
இந்து முறை:- 
     0,1,2,3,4,5,6,7,8,9 ஆகிய எண்ணுருக்களைக் கொண்டு பத்தை அடிப்படையாகக் கொண்ட இடப்பெறுமான முறையில் எல்லா எண்களையும் அமைக்க முடியும். இதனை முதன் முதலில் கண்டவர்கள் இந்துக்களாதலால், இம் முறை இந்து முறை எனப்படுகிறது.

இந்தோ அரேபிய முறை:-
     இந்து முறை எண்களை அரேபியரால் மேலை நாடுகளுக்கும் பரப்பப்பட்டதால் இந்தோ அரேபிய முறை எனப்படுகிறது.

இயல் எண்கள்(N):-
      1,2,3,... என்று முடிவில்லா எண்கள் தொகுதியை எண்ணும் எண்கள் அல்லது இயல் எண்கள் (N) என்கிறோம்.(அதாவது ஒன்றில் ஆரம்பித்து முடிவில்லா எண் தொகுதி.)

முழு எண்கள்(W):- 
         0,1,2,3,... என்று முடிவில்லா எண்கள் தொகுதியை முழு எண்கள் என்கிறோம்.

எண்கள் எழுதும் முறை:-
     இரு வகைப்படும். அவை,
                1. இந்திய முறை
                2. ஆங்கில முறை  ஆகும்.

இந்திய முறை:-
     வலமிருந்து   ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம்,  பத்து இலட்சம், கோடி என் எழுதும் முறை.
     எடுத்துக்காட்டு:-
         1,23,45,678 = ஒரு கோடியே இருபத்திமூன்று இலட்சத்து நாற்பத்தைந்தாயிரத்து அறுநூற்று எழுபத்தெட்டு.

ஆங்கில முறை:-
      வலமிருந்து இடதுபுறமாக ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், நூறாயிரம், மில்லியன், பத்து மில்லியன், நூறு மில்லியன் என எழுதுவது ஆங்கில முறை.  
   எடுத்துக்காட்டு:-
       123,456,789 = நூற்றிருபத்திமூன்று மில்லியன் நானூற்று ஐம்பத்தாறாயிரத்து எழுநூற்று எண்பத்தொன்பது.

திட்ட வடிவ எண் உருவு:-
     திட்ட வடிவ எண் உருவினை எழுதும்போது வலமிருந்து இடம் செல்ல செல்ல மூன்று, முன்று இலக்கங்களாக இடம்விட்டு எழுதுவது சர்வதேச மரபாக ஏற்கப்பட்டுள்ளது.    
       எடுத்துக்காட்டு:-
                        123,456,789.

தொடரி:-
       ஓர் எண்ணைத் தொடர்ந்து வருகின்ற அடுத்த பெரிய எண், அதன் தொடரி ஆகும்.  
  எடுத்துக்காட்டு:-
               8 இன் தொடரி 9.

முன்னி:-
             ஓர் எண்ணின் முந்தைய சிறிய எண், அதன் முன்னி எனப்படும்.
        எடுத்துக்காட்டு:-
                      8 இன் முன்னி 7.

ஏறு வரிசை:-
       கொடுக்கப்பட்ட எண்களைச் சிறிய எண்ணிலிருந்து பெரிய எண்ணிற்கு வரிசைப்படுத்தி எழுதுவது  ஏறுவரிசை எனப்படும்.
  எடுத்துக்காட்டு:- 
            8, 11, 15, 17, 23, 30.

இறங்கு வரிசை:-
  கொடுக்கப்பட்ட எண்களைப் பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணிற்கு வரிசைப்படுத்தி எழுதுவது  இறங்குவரிசை எனப்படும்.
     எடுத்துக்காட்டு:- 
                 40, 33, 24, 15, 9.

கூட்டல்:- 

     எண்களை சேர்த்து மொத்தம் காணும் செயலைக் கூட்டல் என்கிறோம்.


சுழியுடன் கூட்டல்:-
    சுழியுடன் எந்த முழு எண்ணைக் கூட்டினாலும் அல்லது எந்த முழு எண்ணுடன் சுழியைக் கூட்டினாலும், அதே எண்தான் விடையாகக் கிடைக்கும்.

கழித்தல்:-
      ஓர் எண்ணிலிருந்து மற்றோர் எண்ணைக் குறைத்து மீதியைக் காண்பது கழித்தல் ஆகும்.

எதிரெதிர்ச் செயல்கள்:-
     1. கூட்டலும் கழித்தலும் எதிரெதிர்ச் செயல்கள் ஆகும்.
     2. பெருக்கலும் வகுத்தலும் எதிரெதிர்ச் செயல்கள் ஆகும்.

சுழியைக் கழித்தல்:- எந்த எண்ணிலிருந்து சுழியைக்  கழித்தாலும் அதே எண்தான் விடையாகும்.

அனைத்துச் செயலிகளும் கலந்த கோவைகளைத் தீர்த்தல்:-
     (அ) 1. கூட்டலும் கழித்தலும் சேர்ந்து வரும் கணக்குகளில் கூட்ட வேண்டிய எண்களை எல்லாம் ஒன்றாகக் கூட்ட வேண்டும். கழிக்க  வேண்டிய எண்களை எல்லாம் ஒன்றாகக் கூட்ட வேண்டும். பின் முதல் கூட்டுத்தொகையிலிருந்து இரண்டாவது கூட்டுத்தொகையைக் கழிக்க வேண்டும்.
     எடுத்துக்காட்டு:-
           9218 - 2346 - 4719 + 381
         = 9218 + 381 - 2346 - 4719
         = 9599 - 7065
         = 2534.
         2. அடைப்புகள் இருப்பின் முதலில் அடைப்புகளுக்குள் உள்ள செயல்கள்ச் செய்து கொண்டு பின் கூட்டல் அல்லது கழித்தலைச் செய்ய வேண்டும்.
     எடுத்துக்காட்டு:-
            18 - ( 7 - 1) + 5 - 6
          = 18 - 6  + 5 - 6
          = 18 + 5 - 6 - 6
          = 23 - 12
          = 11.
     (ஆ) எண்களாலான ஒரு கோவையில் +, -, ×, ÷ ( ) போன்ற குறிகள் இருக்கலாம். அவ்வாறு இருப்பின்,
          1. முதலில் அடைப்புக்குள் உள்ள செயல்களைச் செய்ய வேண்டும்.
          2. பின் ×, ÷ ஆகிய செயல்களை இடப்புறமிருந்து வலப்புறமாக வரிசைப்படிச் செய்ய வேண்டும்.
         3. அதன் பின், +, - ஆகிய செயல்களைச் இடப்புறமிருந்து வலப்புறமாக வரிசைப்படிச் செய்ய வேண்டும்.

பெருக்கல்:-
      பெருக்கல் என்பது ஒரே எண், பல முறைக் கூட்டுவதற்கு பதிலாக பயன்படும் செயல்.
       எடுத்துக்காட்டு:-
            7 + 7 + 7 + 7 = 28
            7 X 4 = 28.  

 ஒரு செயலின் சுருக்கம்:-
            பெருக்கல் என்பது கூட்டலின் சுருக்கம் ஆகும்.

சுழிப் பெருக்கல்:-
      சுழியால் எந்த எண்ணைப்  பெருக்கினாலும், அன்றி சுழியை எந்த எண்ணால் பெருக்கினாலும் விடை சுழிதான் கிடைக்கும்.
    எடுத்துக்காட்டு:-
             4 X 0 = 0
             0 X 7 = 0.

ஒன்றால் பெருக்கல்:-
          எந்த எண்ணை 1 ஆல் பெருக்கினாலும் அதே எண்தான் பெருக்கற் பலனாக அமையும்.
     எடுத்துக்காட்டு:-
             12 X 1 = 12
              1 X 8 = 0.

வகுத்தல்:-
         ஓர் எண்ணிலிருந்து, ஒரே எண்ணை பல முறை கழித்தலை வகுத்தல் என்கிறோம்.

சுழியை வகுத்தல்:-
       சுழியைச்,சுழியைத் தவிர வேறு எந்த எண்ணால் வகுத்தாலும் விடை சுழி.

ஒன்றால் வகுத்தல்:-
          எந்த எண்ணையும் 1ஆல் வகுத்தால் விடை அவ்வெண்ணே ஆகும்.

சூத்திரம்:-
          வகுபடும் எண் = ஈவு X வகுக்கும் எண் + மீதி